முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
இனிய இந்தியா????!!!அழியும்.. அல்லது அழிக்கப்படும்... அல்லலோடுதான் கழிகிறது ஒவ்வொரு இந்திய இரவும்!!.. அடிமைத்தனமாயிருந்த இந்தியாவை அடிபட்டு அடமானம் மீட்ட அரசியல் மருகிப்போய் மறுஜென்மமெடுத்தாலும் பங்குண்டென்று புள்ளிவிவரம் சொல்லுமளவு மனச்சாட்சியில்லா கடன்.... அன்று வெள்ளையனிடம் மீட்டதை அவனிடமே அடகுவைக்கும் அவலச்செயல்...... "ஆட்சிக்கு வந்தால் கடனை ஒழிப்போம்.... உலக வங்கியின் கிளை உங்களூரில் திறக்கப்படும்" - கைகொட்டுகிறது தொண்டர்படை.. கசிந்துருகிறது தொண்டைக்குழிக்குள் இந்தியதேசத்தின் பெருமைகள் மென்றுதின்னப்படுவது கண்டு... அஸ்ஸாமில் உல்•பா.. ஆந்திரத்தில் நக்ஸலைட்.. காஷ்மீரில் லஷ்கர்-இ... தமிழகத்தில் அல்-உம்மா.. ஆளுக்கால் குத்தகை முத்திரை இல்லா டெண்டரில்... மொத்த தேசத்தின் மீதி இடங்களும் குத்தகை.. நாம் சீல் போட்டு அணுப்பிய சீலர்களால்... சீக்கியத் தீவிரவாதி சுட்டதில் இருவர் பலி... இரத்தம் கொதிப்பதாய் புகைவிட்டான் குடிமகன்.. மிச்சம்போட்ட சிகரெட் துண்டால் துடிதுடித்து இறந்தன இருபது உயிர்கள்..... இருவருக்குமென்ன வித்தியாசம்??!!!.. சாதனை இந்தியாவிற்கு கனவு காண்கிறோம்.. சத்தமில்லா வாழ்க்கையை தொலைத்துவிட்டு.. "மனிதனாய் பிறந்திட மாதவம்" - புத்தங்கங்கள் தீக்குளிக்கும்.. புதைந்துபோகும் மனிதநேயத்தால்.. இந்த இந்தியா.. இனிய இந்தியாவாய் எப்போது உருவெடுக்கும்?!!.. விடைதெரியா கேள்விகள்.. கேட்டு கேட்டு அலுத்துப்போன இன்னொரு இந்தியன்....... posted by Poo at 9/03/2004 04:30:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
எங்கே செல்லும் பாதை?!!அவலம் மறந்த அவளது பயணம்.. மானத்தை விற்று கல்வியை வாங்க மார்புகாட்டும் படலம்... மகளின் எதிர்காலம் கல்வியறையில் கழிய.. நிகழ்காலத்தை பள்ளியறையில்.. பரிதாப பேதை... காந்தி கண்ட கனவு- இவள் இரவில்தான் நடக்கிறாள்!!! **** சிக்னலில் சிக்கலான வாகனக்கூட்டமிடையில் சிறகு விரிக்கும் சின்னச்சிட்டு... ஆளாய்ப் பறக்கிறது அரைவயிற்றுக்கு அரைஞான் கயிறறுந்த அஞ்சு வயசு பிஞ்சு.. நேருவின் ரோஜா -இதழ்களை உதிர்த்துக் கொண்டு!! .. **** களரி கற்ற கல்லூரியில்.. களவிப்பாடம்.. புத்தக பெட்டகமிடையில்.. கஞ்சா பொட்டலம்.. பேனா பிடித்த விரல்களில்.. மென்த்தால் மணம்.. நீராருங்கடலொடுத்த.. வாயில் குடலு மேல உடலு.. மாவீரன் வரலாறு படிக்கும் நாளைய தூண்கள்.. சாய்ந்த நிலையில்.. நெப்போலியன் துணையோடு!!.. *** எதிர்கால இந்தியாவை வளமாக்க தேடுதல் வேட்டை.. இன்றைய இந்தியாவை தொலைத்தபடி!!!!... posted by Poo at 9/03/2004 03:30:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
எங்கே எனது கவிதை?!...கிறுக்(கனாக)கிய கிறுக்கல்களை கவிதையாக்கிட காகிதங்கள் தேடியலைந்த நாட்கள்... இப்போதெல்லாம் கண்முன்னே கடந்துசெல்கிறது... அப்போதெல்லாம் அவள் என் காதலியாய்.. அவளுடன் அலைந்து திரிந்த வசந்தகாலங்கள்.. என் இதயவாசலில் வாரியிறைத்த கவிதைக் கோலங்கள்.. அன்று.. எல்லாமும் அவளேயென்றேன்.. அவள்மட்டும் எனக்கில்லை இன்று... எடுத்துச்சென்றது என் கனவுகளை.. விடுத்துச்சென்றது என் காதலை.. அவள் நினைவுகளோடு எரித்துவிட்டேன்..கவிதைகளை மட்டுமல்ல.. கருக்களையும்தான்.. கொஞ்சகாலமாய் உள்ளத்தில் துளிர்க்கிறது... கவிதை ஆசைகளை கட்டுப்படுத்தமுடியவில்லை.. எழுத அமர்கையில் எனக்கோர் சந்தேகம்.. எதை முதலில் தேடுவது.. காதலியையா.. கருக்களையா??!!.. posted by Poo at 9/03/2004 03:27:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
இதுதான் (இதுவும்) காதலா?!!!அவசர காலை.. அளவில்லா கூட்டம்..அரசுப் பேருந்து.. படியில் பயணம் நொடியில் மரணம்.. விதிப்படி நடந்தால் விடியலில்தான் கல்லூரி சேர்வேன்.. விதிப்படி நடக்கட்டுமென வெளியில் தொங்கியபடி.. கையிலே நாட்குறிப்பு-கல்லூரியில் கவிதை மட்டுமே எழுதுவதால்.. வெளிக்காற்றை சுவாசித்தேன்.. உள்காற்றை வெளியேறிடுமோ.. உதறலோடு.. விரல்களால் பயணம்.. என் வாழ்க்கை சக்கரத்தின் தற்போதைய அச்சாணி ஐந்து விரல்கள் மட்டுமே.. அந்த விரல்களுக்கிடையில் விவரம் புரியாமல் விளையாடியபடி நாட்குறிப்பேடு.. விழப்போகும் வினாடியை வழுக்கி வழுக்கி விழுங்கிக் கொண்டிருந்தன விரல்கள்.. விடியலாய் ஓர் கை.. வளையல் குலுங்க விரல்களை பற்றியது.. பற்றிய வினாடியில் பற்றிக் கொண்டது- எனக்குள்ளும்.. என்னவென சொல்லத் தெரியாத வித்தியாச உணர்வுகள்.. அந்த பிடி இறுகியது.. இறுகிய பிடியில் அவளது இளகிய இதயத்தின் ஈரம் உணர்ந்தேன்.. வளையல் குலுங்கலில் அவள் கண்களில் தவழும் பரிதவிப்பை படமெடுத்தேன்.. அவள் முகம் கொஞ்சமும் பார்க்கவில்லை.. மனம் முழுதும் பார்த்துவிட்டேன்.. அவள் பற்றுதலின் பதற்றத்தில் என் நெஞ்சம் சுவாசமானது.. உயிரின் விலையறிந்த அந்த விசுவாசியின்மேல் நேசம் பற்றிக் கொண்டது.. தீவிரமாய் முயன்றேன்.. அவள் முகத்தை தீண்டமுடியாமல் திண்டாடின என் தீயான கண்கள்.. அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது.. . என் துடிப்பும்தான் - துணையாய் இருந்த அவள் கை விவாகரத்து வாங்கிக் கொண்டதால்.. ஏராள கன்னிகள் கலர் கலராய் இறங்கினர்.. ஆனாலும் கன்னியவள் யாரென கண்டெடுக்க முடியாமல் கலங்கி நின்றேன்.. கையை மட்டுமே கடவுச் சொல்லாய் கொண்டு கண்கள் விசாரித்ததில் விடை தெரியாமல் வெடித்து சிதறிய விண்கலமானது நெஞ்சம்.. அவளைக் காணமுடியாமல் கணக்கிலா சோகம் தஞ்சம்.. அன்று என் சுவாசம் காத்தவள் என் சுவாசமாய் வந்திடக் கூடாதாவென இன்றுவரை படியில்தான் பயணிக்கிறேன்.. உன் தாக்கத்தால் உணர்வுகளில் உயிரியல் மாற்றம்.. என் மூச்சுக் காற்றே நீ வெளியே வந்தால்தான் நான் உயிர் வாழ்வேன்!!!.. வினாடியில் வந்த அந்த உணர்வுதான் “காதல்” என சொல்லாமல் சொல்லியது என் உணர்வுச் செல்கள்!!! posted by Poo at 9/03/2004 03:21:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
விவசாயி!!!அன்று.. கலப்பை தோளில் ஏந்தி.. களம் நிறைய நெல்மணிகள்.. கொள்முதலில் தில்லுமுல்-அரைவயிறை அவசரமாய் நிரப்பினோம்!! இன்று.. கலப்பைகள் கால்நீட்டியபடி.. களங்கள் கண்ணீர்விட்டபடி.. ஏர்பூட்டிட ஏற்றம் இறைத்திட ஏக்கமாய் நாங்கள்.. கால்வயிறை நிரப்பிக் கொள்கிறோம்.. விறகாய் கலப்பை... அரிசியாய் விதைநெல்!!! நாளை.. இல்லாத இரத்தத்தை சுரண்டி சுரண்டி தானம் செய்யப் போகிறேன்.. சுரண்டலால் வறண்டுபோன எங்கள் வயிற்றில் பால்(லிடாயில்) வார்க்க!!! posted by Poo at 9/03/2004 03:10:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
காதல் வென்றால்....பாலைவனமாய் மனம்.. மேககூந்தல் தரிசனம்.. ஒற்றைக்கால் கொக்காய் தவம்.. பனிமழையாய் பார்வை பாய்ச்சல்.. உள்ளமெங்கும் வெள்ளம்.. அணை போட்டிட அணுமதி - தலையசைத்தாய்.. இசையமைத்தேன் இன்ப நரம்புகளால்.. புதையலாய் உன் காதல்... புதைக்க இருந்த எண்ணங்கள் புதுப்பிக்கப்பட்டன.... உணர்வுகள் உருவிழந்து போனது - ஏதோவொன்றென.. சொல்லமுடியாத வார்த்தைகள் நிறைய பேசினேன்... சொன்னாலும் புரியாத மொழி - காதலித்தால் கற்றுக் கொள்ளலாமோ?!! உன்னில் காதல் வந்த பின்னரே மண்ணில் உதித்ததின் உண்மை விளங்கியது.!!. ஒவ்வொரு சந்திப்பிலும் நம்மை உணர்ந்தேன்.. விதையாய் தூவின காதல்.. விருட்சமாய் வளர்ந்து - கலகலப்பாய் கல்யாணம்!!! இப்போதெல்லாம் என் பலம் இருமடங்காய்.. என்னில்(லும்) நீ இருப்பதால்.. வருடங்களுக்கு மட்டுமே வயசாகின்றன... நாம் மட்டும் இன்(று)னும் இளமையாய்.. நமக்கு மட்டுமேன் இந்த விதிவிலக்கு?!!. ஓ... நம்மில் கசக்காத காதல்.. இனிப்பாய் செய்யும் வேலை!!! சாகாத காதல்.. மரணமில்லா வாழ்க்கை... வரம் வேண்டி தவம் - காதலில் வென்றதால்!!! posted by Poo at 9/03/2004 03:07:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
மே தினம்ஏன் ராசா இன்னைக்குமா வேலை... ஆமாம் புள்ள... ஆரு தருவா சோறு.. இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்.. அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன?!!! உழைப்பாளர் தினம் உண்ணாவிரத நாளா.. அன்றாடங்காய்ச்சிகளுக்குமா கொண்டாட்டங்கள்.. காலண்டரில் மட்டும் இருக்கட்டும்.. சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை.. அரசே உனக்கொரு வேண்டுகோள்.. உன் ஊழியனுக்கு மட்டும் ஊதியத்தோடு விடுமுறை.. மகிழ்ச்சி.. உழைக்கும் வர்க்கத்திற்கு உண்ண ஒருவேளை உணவு?!!.. தேவையா "தினங்கள்"?!! -தினக்கூலி. posted by Poo at 9/03/2004 02:57:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
என்றென்றும் காதல்.....என் இதயதேவதையைக்காண காத்திருந்தேன்.. காந்தி பூங்காவின் புல்வெளியில்.. ஒருமாதம் கழித்து வரும் மானசீக தெய்வத்தின் தரிசனத்திற்க்காக.. நகங்களை கொறித்தபடி மரங்களை வெறித்துக் கொண்டிருந்தேன்.. அவளுக்காக காத்திருப்பதில்தான் எத்தனை சுகம்... முதல் சந்திப்பில் முற்றும் இழந்தபின் முழுதும் அவள்தானென மூடிவிட்டேன்.. முகங்களைத் தேடும் முயற்சிகளை.. கூட்டம் கூட்டமாய் மக்கள் சிறகுவிரித்திருந்தாலும் என் வானதேவதையின் வரவு மட்டுமே பெரிதாக.. அவள்தான் எனக்கு எல்லாம்.. இன்பம்.. துன்பம்.. அவள் மடிமட்டுமே சரணாலயம்.. தூங்காத இரவுகள்தான் நிம்மதி தருகின்றன.. அவள் நினைவுகளால்.. என்னை அடிக்கடி தேடி அலுத்துக்கொள்வேன்.. முழுவதுமாய் அவளே நிறைந்திருப்பதால் என்னில் என்னைக்காணமல் அலுத்துக் கொள்வேன்.. ஆனாலும்.. ஆனந்தம்.. அலுப்பின் முடிவில் ஆனந்தம்.. என் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் அறிந்து தனிஅகராதி போடும் அழகான ராட்சசி.. ஏற்றங்கள் வந்தபோது ஞானியாய்.. பள்ளங்கள் வந்தபோது ஏணியாய்.. எனக்கு எல்லாமுமாய்.. மின்னல் தாக்கிய உணர்வுகள்.. அதோ.. என் நிலா தவழ்ந்தபடி.. நெருங்கியதும் விலகியது கற்பனைத்திரை.. மடிமீது தலைவைத்து படுத்தாள்.. கேசங்கள் கோதியபடி ஒருமாதத்தின் நிகழ்வுகளை மென்றுத் தின்றோம்.. நினைவுகளை அசைபோட்டோம்.. ஆறுமணி கிவிட்டது.. இனி அடுத்த மாதம்தான்.. எழுகையில் தடுமாறிய அவள் கரம்பற்றினேன்.. கலங்(க்)க(ம்) வேண்டாம்.. மரணம் மடிமேல்தானென கண்ணீரைத் துடைத்தபடி நடைபோட்டோம்... சொத்துக்களோடு எங்கள் காதலையும் கூறுபோட்ட மகன் வீட்டிற்கு அவளும்.. மகள் வீட்டிற்கு நானும்.. posted by Poo at 9/03/2004 12:14:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
ஆடாத ஆட்டமெல்லாம்...கருக்கல்ல கடமைன்னு கழனிக்கு.. பத்து மணிக்கெல்லாம் பட பட வண்டியில பக்கத்து டவுனுக்கு மத்தியான சாப்பாடு மஸ்தான் கடை பிரியாணி வாசம் மறக்க வாசக்கடை பீடா.. உடம்பு சூட்டை தனிக்க பகல்ல மோரு.. பணபவுசைக் காட்ட சாயங்கால பீரு.. அரிப்பை அடக்க இராவானா அக்கப்போரு-நான் சிங்கம்டானு சிங்காரமா சுத்திவந்த சின்னாளம்பட்டி மிராசுதாரு.. அம்புட்டும் அம்சவேணி ஊட்டுலதான்.. அடுக்கடுக்கா வரும்..அடிக்கடி போவேன்.. உறை போட்டாலும் உறை போடறத மறக்கமாட்டேன் அத்தனை உசாரா இருந்தும் இப்படி உசுரு போற வியாதி வந்து ஒத்தையில கிடக்கேன்.. அந்த ஆக்ககங்கெட்ட கதை... அவசரம்னு ஒரு நாள்.. அசந்து நின்ன அஞ்சலைய ஆத்தோரமா ஓரம் கட்டினேன்.. பாதியில படக்னு ஞாபகம் அடிப்பாவி ஆணுற போடலடின்னு அலறி எழுந்தேன்.. நானென்ன தே.....யாவான்னு கோவப்பட்டா அந்த பச்சைத் தே....யா.. அந்த சோக்குல -அடடா தப்பா நெனைச்சிப் பூட்டோமேன்னு தப்பை முழுசா செஞ்சு முடிச்சேன்.. மூணு முறைன்னு மார்தட்டி மீசை முறுக்கி!! நான் ஆடற ஆட்டம் பார்த்த அய்யன் ஆத்தா அடாவடியா அத்தைப் பொண்ணு கருத்தம்மாவை கட்டாயமா கட்டிவைச்சாங்க.. செக்கச் செவந்த கருத்தம்மாவை கதற கதற கட்டில்ல போட்டு பக்குவமா செ....யாக்கினேன்.. ஈரஞ்சு மாசத்துல ஆம்பிள சிங்கமொன்னு.. ஆனாலும் அம்சவேணியை அம்போன்னு விட்டுடல.. அடுத்த மாசமே அடி வயித்துல நெருப்பு.. அந்த இடத்துல எரிச்சல். துடிச்சி போனேன்.. தணிச்சி போனேன் -தர்மாஸ்பத்திரிக்கு தலையில கல்லைப் போட்டாரு தலமை டாக்டரு.. கல்யாணம் யிடுச்சான்னு கவலையா கேட்டாரு.. குழந்தையே இருக்குன்னு குசுகுசுன்னு சொன்னேன்.. நாசமாப் போச்சுடா- அத்தனையும் கூட்டிவா இரத்த சோதனை பண்ணனும்.. அடம்பண்ண கருத்தம்மாவை சத்து ஏத்தனும்னு சொல்லி கூட்டியாந்தேன்.. குமுறிப்போய்ட்டேன் அந்த புள்ளைக்கும் இருக்காம்.. அடுத்தது இடியா சொன்னாரு அதுக்கும் இருக்குன்னு.. ஒண்ணும் அறியாம என் ம்பிளை சிங்கம் சிரிச்சதை பார்த்து அழுதேன் -மொதமுறையா.. ஊருக்கே சோறுபோட்ட நாங்க இப்போ தனித்தனியா தரவு இல்லத்துல அடங்கி கிடக்கோம்.. ஆட்டம் போட்ட எனக்கு எயிட்ஸ்ன்னா என்னான்னு அணுபவிச்சி தெரிஞ்சிக்கோடான்னு ஆண்டவன் தந்த தண்டனை.. ஏத்துக்கறேன்.. ஆனாலும் அந்த பரிதாப புள்ளைங்களுக்கும் தானமா தந்த இந்த படுபாவிய மன்னிக்கிறது யாருங்க?!!! posted by Poo at 9/03/2004 12:08:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
அபலை....அருகில் இருந்தவரை அங்கங்கள் புண்ணானது.. அடுத்தவீட்டு பாட்டிமுதல் ஆழ்மனதுவரை ஆண்டவனை வேண்டியது... பாடையில் போகமாட்டானா படுபாவி!!.. சந்தேக வார்த்தைகள் சரளமாய் சங்கீதம் பாடின.. உன் இதழ் திறந்தால் என் இமை திறக்கும்... செவி திறக்கமாட்டாயாவென இறைவனை திட்டினேன்!!. விபத்தொன்றில் விலகிப்போனாய் விதியின் விளையாட்டால் விதவையானேன்.!!!.. விட்டது தொல்லையென விடிந்தது வெள்ளியென பிரகாசமாய் உதித்தேன்.. உண்மையின் வெளிச்சம் உணர்ந்து கொள்ளாமல்.. உன் உதைவாங்கி அழுதபோது பரிதாபப்பார்வைகள்.. பொட்டிழந்தபின் பரிகாசமானதேன்?!!.. நள்ளிரவில் வீதியில்.. திண்ணையில் படுத்துக்கொள்.. பாசப்பரிவர்த்தனைகள்.. பட்டப்பகலில் படுக்கைக்கு அழைக்கிறது பாடையில் நீ போனபின்...!! கணவனாய்(?!) நீ இருந்தபோது கண்ணனாய் கைகொடுக்க... அண்ணனாய் நின்றிட ஆதரவேயில்லை.. கல்லறையில் நீ கரைந்தபின்!!.... தாலிக்கொடி இருக்கும்போதே தூக்குக்கயிறை முத்தமிட்டிருக்க வேண்டுமோ.. முடிந்தபின் அழுகிறேன்...!! விதவைகளை விரசமாய் பார்க்கும் விகற்பவாதிகள் வீதியெங்கும் இறைந்துகிடக்கும்வரை இறக்கும் பெண்கள் குறையப்போவதில்லை... துச்சமென நினைத்து உயிர் துறந்தாலாவது துச்சாதனப் பார்வைகள் துகிலுரியப்படுமா?!... கல்லானாலும் கணவன்... இதனால்தான் சொல்லப்பட்டதோ?!!!.... posted by Poo at 9/03/2004 12:04:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
அம்மா....புரண்டு படுத்தால் பசி.. சோம்பல் முறித்தால் அலுப்பு.. அலுப்பாய் வந்தால் ஆறுதல்.. வியர்வைக்குளியல் குளிர்ந்த நீர் தயாராய்.. தளர்வாய் நடந்தால் சுடுதண்ணீர்.. இருமினால் சுக்கு கஷாயம்.. தும்மினால் தும்பைப்பூ சாறு.. பசித்தால் பதறும்.... புசித்தால் புன்னகைக்கும்.... கண்சிவந்தால் முகம் கறுக்கும்.. முகம் கறுத்தால் மனம் சிவக்கும்.. எப்படியம்மா... ஒவ்வொரு செயலுக்கும் உன் அகராதியில் மட்டும் இத்தனை அர்த்தங்கள்?!!!!!!.... posted by Poo at 9/03/2004 12:01:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
முற்பகல் செய்யின்!!!??..எப்படி அழித்தும் மறைய மறுக்கிறது மனதில் பதிந்த மாசு நிறைந்த கோலம்.. அரைகுறை ஆடையுடுத்தி அங்கங்களை வனப்பாக்கி அதரங்கள் குலுங்க எவர்கண் படினும் கவிழ்ந்திட கவர்ச்சி உடையில் கல்லூரி போர்வையில் காளையர்களின் கனவுக்கன்னியாய் வலம் வரத் துடித்தது.. கன்னிதான் நான்.. கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென கட்டுக்கடங்காமல் நாகரீக மோகத்தால் நகர்வலம் வந்த நாட்கள்... அன்று நான் போட்ட கோலங்கள் மாசு படிந்தவைகளென மனம் உணர்த்தவில்லை.. அனைத்து கொட்டங்களையும் கொட்டிலில் அடைத்து கட்டிலில் மணவாளனிடம் சரணடைந்தேன்... பலனாக பதினெட்டான பருவப்பெண்.. காலைவேளையில் கட்டுடல் காட்டி இறுக்கமான கால்சட்டையில் அந்தரங்ககளை அப்பட்டமாய் ஆட்டி ஓடும் என் செல்லப் பெண்ணைப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்ச்சிகள் குத்தூசிகளாய்.. எப்படி முயன்றும் அழிக்கமுடியவில்லை.. அன்று நான் போட்ட மா(சு)க்கோலத்தை!!! posted by Poo at 9/03/2004 11:58:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
மனைவி........
அதிகாலை குளிரில்
விழித்திருந்தும் எழாமல் நிமிடமொருமுறை தலைநீட்டி வேகமாய் வைத்த நேரம் மிச்சமிருப்பதாய் மனதுக்குள் பேசிக்கொண்டு காபிபோடவும் மனசில்லாமல் கால்களை மார்புமேல் போட்டு.. காட்சிகளை கனவுகளாக்கிவிட்டு கனவுகளை காட்சிகளாய் கற்பனை செய்து விடியலில் தேடலை தேடுகையில்... ஆலைச்சங்கு அலறியது... பதறியெழுந்து போர்வையொடு என்னையும் உதறிவிட்டு.. குக்கரில் அரிசியிட்டு மூன்றாம் விசிலில் நிறுத்தும்படி என்னால் முடியாதென்றாலும் அரைத்தூக்கத்தில் கட்டளையிட்டு அவசர வேகத்தில் குளியலறை நுழைந்தாள்.. அரைக்கண்ணால் கவனித்தேன்.. எடுக்க மறந்த மாற்றுத்துணி.. எரிச்சலடையாமல்(?!) எழுந்து சென்று எட்டிப்பார்த்தேன்... செல்லமாய் ஒரு குட்டுவைத்து "ஏனிந்த கஷ்டம் சார்".. கண்களை பொத்தி கதவை மூடினாள்.. காக்கா குளியல்.. குளித்துமுடித்த குயில்.. குளியலறைவிட்டு கண்ணாடிமுன் சிறகடித்தது.. கண்களை கசக்கிக்கொண்டே கட்டிலில் அமர்ந்து காட்சிகளை கண்டிருக்கையில்.. துலக்க மறந்த பல்.. கழற்றிவிட்ட கூந்தல்.. அவள் கரங்களில் பிரஷ்.. என்னுடையதில் சீப்பு.. “தேங்ஸ்டா செல்லம்” குங்குமத்தை வகிடில்.. கொஞ்சமாய் சாதம் இரவே வைத்த புளிக்குழம்பு.. தயாரானவுடன் கைப்பையை தோளில் மாட்டி.. கண்ணங்களை பற்றி சற்றே நிமிர்த்தி உதடுகளில் சத்தமாய் முத்தமிட்டு.. “ஆபிஸ் போனதும் போன் பண்றேன்.. பத்திரமாய் இருங்கள்..” படியிறங்கிப்போவதை ஜன்னலில் கண்வைத்து கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.. விபத்தொன்றில் இருகால்களை இழந்தபின் தந்தையாய்..தாயாய்.. மகனாய்.. துளியும் முகம்கோணாமல் எனை நடத்தும் என் மனைவியை கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.. posted by Poo at 9/03/2004 11:54:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
கண்டதும் கா(சா)தல் !!.......
புருவம் உயர்ந்தது..
புலன்கள் இறந்தது.. புன்னகைத்தால் புத்துயிர் - நான் குற்றுயிராய் போனதேனோ?!!.. இருகோடி கவிதைகள்.. ஒரு கோடி இளைஞர்கள்... மாதர்களின் மயக்கத்தில்.. மதியிழந்தவர்கள் மத்தியில் இதயம் தொலைத்தவனாய்... இன்னொருவன்.. பருவம் படுத்தும்பாடில் உருவம் என்றாலே உன் ஞாபகம் மட்டும்தான்.. சுயநினைவில்லாமல் நினைவுகள்!!.. குறும்புப்பார்வை குத்திய வினாடிகள்.. எண்ணுகையில் வியர்வையில் குளிக்கிறது இதயம்!.. தேவதை திருமேனியுடன் காதல்.. தலைக்கனம் போனது.. நான் மனிதனாவென்ற மாபெரும் சந்தேகத்தோடு!!.. உன்னையே ஊற்றாக.. உருவகத்தில் உள்ளமெல்லாம் வெள்ளம்.. திருநாள் மட்டுமல்ல ஒருநாளும் நினைவில் இல்லை.. கண்டதும் வந்ததே.. காதலா.... சாதலா??!! posted by Poo at 9/03/2004 11:48:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
வீரவணக்கம்!நூறுகோடி இதயங்களை இமைகளுக்குள் சிறைவைத்து இமயத்துச்சாரலில் இன்னலில் சுகம்காணும் என் தேசத்து சகோதரர்கள்.. எங்களின் கனவுகள் கலையாமல் இருக்க உறக்கங்களை தொலைத்தவர்கள்.. வீரதீபத்தை மார்பினில் தாங்கி கோழைகளின் தாக்குதல்களை விரட்டியடித்து பனிமுகட்டில் எம்பாரத கொடியேற்றும் பட்டாளியன்கள்.. இந்த மனித தெய்வங்களின் குருதியை சுமக்க என்ன தவம் செய்ததோ அந்த வெண்பனி மலைகள்.. கார்கிலில் நீ கண்டெடுத்த வெற்றிமுத்துக்கள்தாம் எங்களை மூழ்கச்செய்யாமல் காத்துவைத்தன.. உறக்கம்..உணவு..கனவு..போல மரணமும் அன்றாட நிகழ்வாய்.. எத்துணை பெரிய மனமுங்களுக்கு.. உங்களைவிட்டு பிரியும் மூச்சுக்காற்றுகள்தான் எங்கள் சுதந்திர சுவாசத்தின் ஆணிவேர்கள்.. உனை ஈன்றவளுக்கும் உன் ஈகை இதயத்திற்கும் இந்நாளில் இதயம் கசிந்து வீரவணக்கமொன்றை சமர்ப்பிக்கிறேன்.. posted by Poo at 9/03/2004 11:42:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
அமிலமாய்...இயற்கைக்கும் செயற்கைக்கும் போராட்டம்..ஜெயித்தது.. ஸ்டிக்கர் பொட்டும் காகிதப் பூவும்!!.. ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.. நம் கலாச்சார குங்குமமும் மணக்கும் மல்லிகையும்!!! பொத்திவைத்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் அங்குல அங்குலமாய் பங்களாவில் படமெடுக்கப்பட்டு இண்டர்நெட்டில்- பல பிரகாஷ்களின் அபயத்தால்!!.. கால் ஆடும் கட்டிலும் பித்தளை சொம்பும் பக்குவமாய் பூட்டிய வீட்டுக்குள்!!.. உலக அகராதியில் தமிழ் அமிழ்து.. கூட்டமேடையில் முழங்கிய சொல்லின் செல்வர் "செல்"லில் மனைவியின் அழைப்பு - அவசரமாய் வாருங்கள் மகனின் "***"ங்கிலப்பள்ளியில் பெற்றோர் கூட்டமாம்!! அமிழ்தென மகிழ்ந்த விஷயங்கள் .. விஷமிகளின் விதைகளால் அமிலமென அரிக்கிறது அடிமனதை!!... posted by Poo at 9/03/2004 11:38:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
கவித்தேடல்...இருளின் ஒளியில் ஒலியின் கீதத்தில் கீற்று நிலவில் நிலவின் குளிரில் குளிர்ந்த பனியில் பனியின் படர்வில் படர்ந்த கொடியில் கொட்டிய மழையில் மலர்ந்த மலரில் மடிந்த விட்டிலில் விடியலின் காலையில் வீசிய தென்றலில் விழுந்த சூரியனில் முளைத்த விதையில் சிறகடித்த பூச்சியில் சீறிப்பாய்ந்த அருவியில் வளைந்த வானவில்லில் வசந்த மேகத்தில்.. இலக்கில்லாமல் காணுமிடமெங்கும் கவிதையைத் தேடினேன்.. உன்னைக்காணும்முன்!!.. posted by Poo at 9/03/2004 11:35:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
செல்..செல்..!!!..அஞ்சலகத்தின் அவசரத்தந்தி அழைப்புகள்.. ஜன்னலில் முகம்புதைத்து விஞ்ஞானம் புரியாமல் விழித்த விழிகள்... ரயில்வேகேட்டில் எண்கள் இல்லா தொலைபேசிகள்.. வியப்பாய் பேசிக்கொண்ட விடியல்கள்... செவ்வகப்பெட்டி.. நகரப்பேருந்து பயணியாய் ரிசீவர்.. வட்ட நாணயமிட்டு விரல் சுளுக்கச்சுற்றி முனை கிடைத்ததும் முனைப்புடன் நிமிடங்கள் முடியும்முன் மூச்சுவிட மறந்து க(த்திய)தைத்த காலங்கள்.. வளர்ந்துகொண்டேயிருந்தேன்.. வளர்ந்துகொண்டிருப்பதை பார்த்து வாய்பிளந்திருக்கிறேன். .. இன்று.. தகவல் தொடர்பில் தனியிடமாம் இந்தியாவிற்கு.. புதுவரவாய்.... "செல்(பேசி)கள்"... மொத்த தொகையில் பத்துசதவீதம் பயனாளிகள்.. சொத்தைமட்டும் சொத்தையாக்கும் வித்தையல்ல.. என் தேசத்தையும்தான்.. வியாபார வளர்ச்சிக்கான உரம்.. நிறம் மாறும் அவலம்.. வரப்பிரசாதம்.. பக்தனுக்கு வலிய வேதனைகளை வழங்கிக்கொண்டு.. நட(ன)மாடும் விபச்சாரத்தின் விலாசங்கள்.. தீவிரவாதிகளின் சண்டை புறாக்கள்.. அரசியல்வாதிகளின் அடிதடி ஆயுதங்கள்.. கடத்தலுக்கு கடவுச்சொல்.. இப்படியாக... உணர்வுச்செல்களை உசுப்பிவிடும் உன்னத சக்தி!!?.. காழ்மீர்தொட்டு தமிழகம்.. ஊடகம் வாயிலாக உளவுவேலை.. இந்திய இதயத்தை பதம்பார்க்கும் பணி.. அதிகமாக உபயோகித்தால் உடலில் புற்று.. அடிக்கடி உரு(எண்)மாறினால் தேசத்தில் புற்று.. என் தேசத்து வரைபடத்தை செல்லரித்துக்கொண்டிருக்கும் செல்(பேசி)களை தோண்டிப்புதையுங்கள்.. தொல்லியல்துறை தோண்டாத இடம்தேடி.. posted by Poo at 9/03/2004 11:28:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
முதல்நாள்......ஒரு ஜூன்மாத காலை.. ஜொலிக்கும் சூரியன் இரசித்தபடி கால்கடுக்க கல்லூரி பயணிக்க... மணக்கும் மல்லிகை... பட்டுப்பாவாடை... சிநேகிதி சகிதமாய் வந்திறங்கினாய்... மார்பினில் தழுவியிருந்த கல்லூரி புத்தகங்கள் கலவிக்கல்வி கற்று முடித்து களவுப் புத்தகங்களாய் கையில் படுத்திருந்த காட்சி கண்களை காயப்படுத்தியது.. தெற்றுப்பல் எட்டிப்பார்க்க வெடித்த இதழ்கள் சிரிப்பைச் சிந்த.. பருக்கள் காணடித்த உப்பிய கன்னங்களால் கவர்ந்திழுத்து காந்தக் கண்களால் மௌன மொழி பேசினாய்.. சிநேகிதிகள் சிந்தனையில் மறைந்தார்கள்.. உன் வசீகர புன்னகையின் ஒளிவெள்ளம் பாய்ந்த பாதிப்பில் உள்ளம் உருவெடுத்தது உன் உருவமாய் மறு உருவெடுத்தது.. உன் மொழி கேட்டிட தவமிருந்த செவியில் ஆயிரம் சலங்கைகள் சங்கமித்ததாய் சந்தோஷ சத்தங்கள்.. உன் கலகல சிரிப்பில் கற்பிழந்தன என் புலன்கள்.. நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போனாய்.. இதயத்துடிப்பை நிமிடமொருமுறை நிறுத்தும்படி திருத்தம் செய்துவிட்டு.. அந்த நாள்.. கனவிலே கழிந்தது.. முதல்முறையாய் பகல் கனவு.. பலிக்காவிட்டால் பலியாவேனென படர்ந்தது சபதக்கொடி.. மூளைத் தோட்டமெங்கும் முளைத்தன.. உன் எண்ணச் செடிகள்... நண்பர்கள் வேற்றுக்கிரகவாசிகளாய்.. சுவாசமே நீதானென சக்கரமாய்.. சர்க்கரை நினைவுகளில்.. சுழன்று திளைத்தேன்.. என்னென்ன மாற்றம்.. எண்ணங்கள் வியந்தன.. சிந்தையில் உன் சித்திரம் செய்யும் வித்தைகள் கண்டு சிதறிப்போயின சிந்தனைக்கோலங்கள்... ஒன்றும் புலப்படவில்லை புலன்கள் அரித்தன.. புலம்பி அழுதேன்.. புரிந்து கொள்ளென சொல்லும் முறை.. விளங்கவில்லை.. அப்படியொரு வழி இன்றுவரை இல்லையென தோழி சொன்னாள்.. உன்னை கண்ணில் படமெடுத்த நான் மண்ணில் மறைந்தால்தான் மறுபதிப்புக்கு வாய்ப்புண்டு.. வலிகள் ஒருநாளென்றாலும் வரலாறுகள் ஒரு யுகம்வரை தொடரும்... உன் உருவம் மட்டுமே உன் விலாசமாய்.. விசனத்தில் தூங்கிப் போனேன்.. கனவில் மீண்டும் இம்சிப்பாயென்ற நம்பிக்கையோடு... posted by Poo at 9/03/2004 11:17:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
வண்ண நிலவே.......நீ வாங்கிவந்த பச்சைப்பட்டுப் பாவாடை படரவிட்டு நடக்கும்போது பஞ்சவர்ணக்கிளி பறப்பதாய்.. ரெட்டைக்கல் பதித்த சிவப்புவண்ண தொங்கட்டான் ஊஞ்சலாடுகையில் எடுப்பாய் இருப்பதாய்.. முத்து மூக்குத்தி மூக்கின்மேலிட்ட விளக்குபோல் கண்ணைக் கூசுவதாய்.. நெற்றிக்கண்ணில் பதித்த மஞ்சள் பொட்டில் மகாலட்சுமியே சிரிப்பதாய்.. பின்னிவிளையாடும் நீலவண்ண ரிப்பன் மேகக்கூந்தலுக்கு ஒட்டியாணமாய்.... செதுக்கிவைத்த செப்புச்சிலையாய்.. அழகுதேவதைக்கு திருஷ்டிப்போடென அடுத்தவீட்டு அத்தை அம்மாவிடம் சொன்னாளே.... அப்பா.. இத்தனை வண்ணமயமான என்னை எப்போது காண்பது நான் - கண்ணில்லா சிறுமி கலங்கிநின்றேன்!!.. posted by Poo at 9/03/2004 11:12:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
வெட்கம்?!!உன் கட்டைவிரல் மாக்கோலம் மேலிட்ட பூக்கோலம்...... உன் சிவந்த நாக்கு சில நொடிகள் பளீர் பற்களுடன் நடத்திய சல்லாப விளையாட்டு.. உன் கருவிழிகள் கணமான பார்வை மின்னலொன்றை இறக்கி ஒளி வெள்ளத்தில் வெள்ளி மெட்டியை ஜொலிக்கவைத்த வித்(ந்)தை... உன் வெண்டை விரல்கள் வீசிய புதிரில் தலைசுற்றிய தாவணி முடிச்சு.. இதில் எது வெட்கம்?!!...... posted by Poo at 9/03/2004 11:05:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
நினைவலைகள் எழுகிறதே....எத்தனை டிசம்பர்மாத சீஸன்.. மறக்கமுடியவில்லையே.. பூவரச இலை சுருட்டி நாதஸ்வர கச்சேரி நடத்திய நாட்களைமட்டும்.. பச்சைப்பசேல் வயல்வெளிகளில் வரப்புகளின்மேல் நாட்டியமாடி சந்தோஷ சிறகடித்து ரீங்காரமிட்ட வண்டுகளுடன் இனம்புரியா சத்தமெழுப்பி இன்பமாய் உணர்ந்த தென்றல் வீசும் பகல்பொழுதுகள்.. கூடுதேடி கூட்டமாய் பயணம்.. மாலைநேர புறாக்களிடம் பூப்போடு..பூப்போடு.. நகங்களை உரசி கீறல்களில் உற்சாகமாகி கரம்கொட்டி..சிரித்து சிரித்துவிழும் சிவப்புச்சூரியனை இர(ரு)சித்த மாலைப்பொழுதுகள்.. நால்வரை கூட்டணியாக்கி நாட்டாமை வீட்டு மாடியில் நிலவொளியில் ஆடிய கண்ணாமூச்சுகள்... கட்டைத்திண்ணையில் முட்டியிடித்து எச்சில் மருந்தால் மருத்துவம் பார்த்த இரவுநேரங்கள்.. குளத்தில் வீசும் கல்... விழுந்தால்...எனக்கு.. விழாவிடில் உனக்கு.. யாருக்கு கடைசிவீட்டு காவேரி... மல்லுக்கட்டிய வீரவிளையாட்டுக்கள்.. அவசரமாய் வந்துவிட்டால் கால்சொக்காய் பை நிறைய கல் நிரப்பி கல்லணை நோக்கி பிடறிதெறிக்க ஓடிய நினைவுகள்.. கிழிந்த டவுசர் கண்டால் கிழக்குவெளி சிந்தாமணி கிழவிக்கு தபால்போடும் சாமார்த்தியங்கள்.. லாட்டரி சீட்டுகளால் டெல்லிக்கும் கிராமத்திற்கும் நடத்திய பன்னாட்டு விமானசேவை.. குட்டிசைக்கிளை எட்டணா வாடகைக்கு... தள்ளிக்கொண்டும் தத்திக்கொண்டும் கடந்த காலங்கள்.. மறந்திடவா முடிகிறது.. பச்சை கிராமத்து பசுமை நினைவுகளை?!.. முந்திரிக்காடுகளில் மூக்குறிஞ்சிய நாட்களை விஞ்சி.. டவுன்பள்ளிக்கூடம்.. பாலம் கடந்து.. பயணிக்க ஆரம்பித்த நாட்கள்.. முந்திரிப்பாலால் தொடைகளில் பெயரெழுதி.. கம்பவுண்டர் மாமாவிடம் களிம்பு வாங்கி.. அப்பாவுக்கு தெரியாமல் ஆற்றிவிட்டாலும் இன்னமும் மாறவில்லை வடுக்கள்.. இதயத்தில் விழுந்த வடுக்கள்.. அந்த இன்ப நாட்களின் இனிய வடுக்கள்.. இன்னமும் மாறவில்லை... வளர்ந்துவிட்ட ஜீவன்களில் சொல்பேச்சு கேட்ட சொக்கத்தங்கத்தை அய்யனாரப்பனுக்கு நேர்ந்துவிட்டதென வெட்டிய நாளிலல்லவா புரிந்தது... அதுவும் ஆட்டுக்குட்டிதானென்று.. அடுத்தத்தடுத்த வாரங்களில் கலங்கிய கண்களோடு பள்ளிசென்றதை இன்று நினைத்தாலும் காட்சிகள் கலங்கலாகத்தான் தெரிகிறது... கண்ணீரைமுட்டி எட்டிப்பார்ப்பதால்.. இரண்டற கலந்துவிட்ட கிராமம்விட்டு போவதில்லை... ஆற்றங்கரையில் சபதமிட்டு கல்லூரியில் கால்பதித்த நாங்கள்.. இப்படியாக.. இளமைக்கால நினைவுகளை இனிமையாய் அசைபோட்டோம்.. இண்டர்நெட்டில்..இ-மெயில் துணையோடு!!??.. ம்.. அவன் இன்று அமெரிக்காவில் நான் ஆஸ்திரேலியாவில்.. எங்களை வளர்த்த கிராமமோ வேற்றுக்கிரகத்தில்..- நினைவலைகள் எழுகையில் அசைபோடுவோம்!!!.. நிழல்களில் நினைவுகளை நிறுத்தி நிஜங்களில் நடைபிணமாய் ந(ர)கரத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. இழந்துவிட்ட கிராமத்து வாழ்க்கையை இதயங்களில் உயிர்ப்பிக்கும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே... கண்களை துடைத்து காட்சிகளை நிறுத்தினேன் கணினியில்.!!!.. posted by Poo at 9/03/2004 10:56:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
வேலைக்கு போகும் என் மனைவி!!ஊருக்கு முன்னெழுந்து உலைவைத்து மதிய உணவையும் முடித்து மஞ்சள் பூசிய மங்களவதியாய் தேனீர் கோப்பையோடு என்னை செல்லமாய் எழுப்புகையில் உன் பாசவலையில் சிக்கித் தவிப்பதை அழகாய் உணர்கிறேன்.. நானும் உதவுகிறேன்... நீங்களொரு குழந்தையென -என்னையும் தயார்படுத்தி.. அவளை ஆட்டோவிலும் என்னை அந்தக்கால சைக்கிளிலும் ஏற்றி அணுப்பும் உன் அணுசரனை -அகிலமே உன் அன்புதானென அழத் தோணுகிறது.. தெருமுனை மறையும்வரை கையசைத்து.... அடுத்த அரைமணியில் அவசரகதியில்.. அடித்து பிடித்து அரசுப் பேருந்தில் அலுவலகம் பயணிக்கும் உன்னை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன.. உன்னை இல்லத்தரசியாய் வைக்கத்தான் ஆசை.. என்ன செய்ய நடுத்தர வர்க்கமென்றால் வேதனைகளை தாங்கும் இன்னல்தரசியாய்த்தான்.... இன்னல்களையும் இன்பமாய் தாங்கும் உன் இதயம்- எனக்கொரு இமயமாய்த்தான் தெரிகிறது..!!! posted by Poo at 9/03/2004 10:54:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
காதல்...கல்யாணம்...காதல்..நானும் நீயும் இணையாய் இணைந்தெடுத்த நிழற்படங்கள் எல்லாம் நிஜமானவைகளாய்.. உயிரில்லா உருவப்படங்கள் உயிரோட்டத்தை உணர்த்தும் உன்னத உணர்வை இன்றுவரை இரவு உணவருந்துகையில் அசைபோடும் அழகு.. . அருமை!! கடுஞ்சொல்லெனும் கசப்பை நம் அகராதியிலிருந்து நீக்கிய நாள்- நீண்ட பயணம் தொடங்கிய நிம்மதி பெருநாள்.. மகிழ்ந்த மணநாள்.. இன்று நினைத்தாலும் இனிக்கிறது.. கணவன் - மனைவியென்ற ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது.. தோழன் - தோழி.. காதலன் - காதலி.. என பல பட்டங்களை பலரால் சொல்லவைத்த பெருமை யாரைச்சேரும்?!! இத்தனை நாளும் இணைபிரியாதிருந்தோம் இறப்பிலும் இணையத்தான் போகிறோம்.. உடலைவிட்டு உயிர் போனபின் இருந்தென்ன பயன்?!!.. ஆமாம் நம்மில் உடல் யார்... உயிர் யார்??!! posted by Poo at 9/03/2004 10:51:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
உருவாகிறார் ஒரு அரசியல்வாதி...
ஐந்து வயதில்
என் பையன் சிங்கம்லா.. ஏ.. கிழவி.. ஒம்பேரன் வளந்து ஒனக்கு ஊசிப் போடறதுக்குள்ள உசுரை உட்டுடாத.... பதினைந்து வயதில் இந்தாடா.. செட்டியாரு கடையில எட்டணாவுக்கு கணேஷ் பீடி வாங்கியா.. படிக்கனுமா.... கிழிச்ச.. போய் வாங்கியாடா போக்கத்தவனே... எங்க கெளம்பிட்டாரு துரை.. ஸ்கூலாவது.. மயிராவது... போடா.. போய் கபாலியண்ணங்கிட்ட அப்பன் கேட்டுச்சுண்ணு நாலு சைக்கிள் டீ(யு)ப் வாங்கியா... ஏண்டி ராக்கு... கபாலியை நம்பி எவ்ளோ நாள்... பையனும் வளந்துட்டான்.. நாமளே காய்ச்சினா இன்னா?!.. இருபத்தைந்து வயதில் மவனே... வெள்ளம் கொண்டாந்த வெள்ளையம்மாளை தொட்டுப்பூட்டயாமே.. அப்புறம் நம்ம ராசு கொழுந்தியாள.. ம்ம்.. சரி சரி..இதையெல்லாம் என் காதுல உழறாப்போல வைச்சிக்காத... முப்பத்தைந்து வயதில் டேய் ..அப்பனுக்கும் வயசாச்சு.. அடுத்தவார ஏலத்தை ருக்கும் உட்டுடாத.. நம்ம பயலுவல அள்ளிக்கிட்டு போய் தட்டிக்கிட்டு வந்திடு.. ங்.. ரு பெரச்சிணை பண்ணாலும் வெட்டிட்டு வந்துடு.. அப்பால பாத்துக்கலாம்.. நாற்பத்தைந்து வயதில்... ஏ.. ராக்கு.. ஒம்புள்ள இருவதாயிரம் ஓட்டுல ஜெயிச்சிப்புட்டாண்டி.. ம்ம்.. என்னாடி வாயப்பொளக்கற. எம்.எல்.ஏன்னா சும்மாவா.. நம்ம பசங்க ஆளுக்கு அம்பது குத்தனானுங்கல்ல.. மவராசனா போய்ட்டு வாடா... ஆறே மாசத்துல மந்திரியாவணும் நீ!!!... posted by Poo at 9/03/2004 10:47:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
ஒருதலைக் காதலன்.....தினமும் பூக்கிறது என்வீட்டு ரோஜாச்செடி.. ஐந்தறிவுக்குள்ள உணர்வு உனக்கில்லாமல் போனதின் அர்த்தம்?!.. சூரியன்தான் எனக்கும் என் உணர்வுகளுக்கும் உந்துசக்தியாய்.. மாலையில் வீழ்ந்தாலும் மறுநாள் எழச்சொல்லும் மாமந்திரம்.. உணவும் உறக்கமும் மட்டுமே மறந்துவிட்டதென நினைத்தேன்.. - உணர்வுகளும்தான்.. நினைவூட்டுகிறது மரத்துப்போன உன் மனது... உன்னில் நானிருக்கிறேன் என்னில் நீயிருக்கிறாய் நன்றாக உணர்கிறது நமக்கும் வெளியே நிற்கும் காதல்.... ஆலயம் செல்லாமல் கடவுளை கைதொழுகிறேன்.. காதலெனும்... கடவுளை... என் தலையணைகள் கதறியழுகின்றன... கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள் தலைச்சுமையைக் காட்டிலும்... நிலவுக்கு துணையாய் நியமித்தாய்.. தனியே... நித்தமும் மௌனமொழிகளால் கொன்றுவிட்டு போகிறாய்... உன் இதழ்கள் காதலென விளித்தாலொழிய என் இரவுகள் மொட்டைமாடிகளைவிட்டு வெளியேறும்.... உணர்வுகளால் உருவான காதல்... உணர்ந்துகொள்ளும் காதலை... உணர்ச்சிகளால் வடிக்கப்பட்ட உன்னால் உன் இதயக்கோயிலில் ஒளியாக்க முடியாதா?!!..... சொல்.. இல்லையேல்..கொல்.. செய்வதா... செத்து மடிவதா?!!.. posted by Poo at 9/03/2004 10:43:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
கனவு..க்...கன்னிவாசலில் சாணமிட கொட்டகை நோக்கி.. செவிகளில் சலங்கைச் சத்தங்கள்.. வெட்கத்தில் விலகி நின்றேன்.. காளையும் பசுவும் காதலில் திளைப்பதாய்.. நான் இட்ட கோலங்களை திரும்பிப்பார்க்கையில் கண்கள் விரிந்தன... பச்சரிசிப்பொடிகள் கும்மாளமாய் கூத்தடித்தன எறும்புக்கூட்டங்களுடன்.. தோசைவார்க்க மாவை ஊற்றியபோது துள்ளிக்குதித்தன எண்ணெய்க்குமிழ்கள்.. ஓருயிராய் இணையப்போவதின் வெட்க வினாடிகளோவென யோசித்துவைத்தது உள்ளம்.. சாப்பிட்ட தட்டை கழுவுகையில் சிரிப்புதான் வந்தது.. கனநேரமே உறவாடினாலும் விட்டுப்பிரிய மறுத்த பிசுபிசுப்புகள்.. மல்லாந்து படுத்து கூரையை மேய்ந்தேன்.. பல்லிகளின் வேலையைக்கண்டு பல் கூசியது.. பாசமாய் பார்த்தபடி அப்படியென்ன பேசிவிடுமென சின்னக்கற்பனை... சிதறடித்தது.. சித்தூரிலிருந்து வரனொன்று வருவதாய் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்த தரகரின் வார்த்தைகள்.. சிதறடித்தது.... இன்றாவது (மு)விடியாதாவென ஏக்கப்பெருமூச்சுடன் எழுந்துசென்றேன்.. முப்பதைத்தாண்டியும் முன்வாசல் தாண்டாத முதிர்க்கன்னியான நான்!!! posted by Poo at 9/03/2004 07:28:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
ஆசிரியர் தினம்...மனதுக்குள் புயலடித்தபோதெல்லாம் மடியில் தலைவைத்த நினைவுகள்.. கண்ணுக்குள் மின்னலாய் பாய்ந்து என்னை முன்னுக்கு தள்ளிய உன் முயற்சிகள்.. தளரும்போதெல்லாம் தூக்கிப்பிடித்து வானம் கண்ணுக்கெட்டும் தூரம்தானென வந்துவிழுந்த உன் வார்த்தை மழைகள்.. தடுமாறத்துடித்த வாழ்க்கைத்தடத்தை திசைமாற்றி வளமாக்கிய உன் செப்படி வித்தைகள்.. வீழ்வது நீமட்டுமே விதைத்த உன் எண்ணங்களல்ல எல்லா நேரமும் என்னில் சுடரேற்றிய தீப்பொறிகள்.. உன் ஆசைகள் நிராசையாகாமல் ஜெயித்துவிட்டேன்.. வெற்றிக்கனி பறித்த நொடியில்.. குனிந்தபோது குட்டிய விரல்கள்.. கனிந்தபின் கவரவந்த கண்கள்.. விழுந்தபோது விலக்கிய கால்கள்.. எழுந்தபின் அணைக்கும் கரங்கள்.. எதுவும் எனக்கு தெரியவில்லை எல்லாமுமாய் என்னருகே நின்ற என் ஆசானே.. எனக்கெதுவும் தெரியவில்லை உனைவிடுத்து எனக்கெதுவும் தெரியவில்லை !!... posted by Poo at 9/03/2004 05:35:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
ஒரு கிராமத்து காதலியின் ஏக்கம்...கணிணிப் பித்தனே... இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா.. சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.. முறையாய் ஒட்டப்பட்ட உன் ஒற்றைவரி மடல் வராதாவென வழியில் விழி கொண்டு தபால்காரருக்கு ஏங்கிய சுகம்.. இண்டர்நெட்டின் இ-மெயிலில் இல்லை... கம்ப்யூட்டர்தானே நவீனமாய்.. காதலுமா??!!.. புறாக்கள் விடும் தூதை இரசித்தேன்.. யாகூவின் யாசித்தலை ஏற்க முடியவில்லை.. இயற்கை வயல்வெளியில் மாராப்பு மடிப்பில் மறைத்து மறுபடியும் மறுபடியும் படித்து இனித்த சுகம்... இயந்திர இ-மெயிலில் இல்லை.. கம்ப்யூட்டர் காலத்தைதானே வென்றது.. காதலையுமா?!!! தென்னை ஓலையில் பொக்கே செய்து.. செட்டி தோட்டத்து ரோஜாப்பூவை ஒட்டி வைத்து ஆற்று சத்தத்தில் பார்த்து ரசித்த சுகம்.... இ-கார்டு என இம்சையாய் சத்தமெழுப்புகையில் இல்லை... என் இதயக் காதலனே.. சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.. இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா... posted by Poo at 9/02/2004 06:36:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
வணக்கம்..நான் கவிஞன் அல்ல... நிறைய கவிதைகள் படித்து... நிறைய நிகழ்வுகளை நினைத்து...பாதிக்கப்பட்டு.. .. இப்படி பலவித அனுபவங்களில் எனக்குள் எழுந்த வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்... படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால் இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்... தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...
posted by Poo at 8/25/2004 09:52:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|