![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
நினைவலைகள் எழுகிறதே....எத்தனை டிசம்பர்மாத சீஸன்.. மறக்கமுடியவில்லையே.. பூவரச இலை சுருட்டி நாதஸ்வர கச்சேரி நடத்திய நாட்களைமட்டும்.. பச்சைப்பசேல் வயல்வெளிகளில் வரப்புகளின்மேல் நாட்டியமாடி சந்தோஷ சிறகடித்து ரீங்காரமிட்ட வண்டுகளுடன் இனம்புரியா சத்தமெழுப்பி இன்பமாய் உணர்ந்த தென்றல் வீசும் பகல்பொழுதுகள்.. கூடுதேடி கூட்டமாய் பயணம்.. மாலைநேர புறாக்களிடம் பூப்போடு..பூப்போடு.. நகங்களை உரசி கீறல்களில் உற்சாகமாகி கரம்கொட்டி..சிரித்து சிரித்துவிழும் சிவப்புச்சூரியனை இர(ரு)சித்த மாலைப்பொழுதுகள்.. நால்வரை கூட்டணியாக்கி நாட்டாமை வீட்டு மாடியில் நிலவொளியில் ஆடிய கண்ணாமூச்சுகள்... கட்டைத்திண்ணையில் முட்டியிடித்து எச்சில் மருந்தால் மருத்துவம் பார்த்த இரவுநேரங்கள்.. குளத்தில் வீசும் கல்... விழுந்தால்...எனக்கு.. விழாவிடில் உனக்கு.. யாருக்கு கடைசிவீட்டு காவேரி... மல்லுக்கட்டிய வீரவிளையாட்டுக்கள்.. அவசரமாய் வந்துவிட்டால் கால்சொக்காய் பை நிறைய கல் நிரப்பி கல்லணை நோக்கி பிடறிதெறிக்க ஓடிய நினைவுகள்.. கிழிந்த டவுசர் கண்டால் கிழக்குவெளி சிந்தாமணி கிழவிக்கு தபால்போடும் சாமார்த்தியங்கள்.. லாட்டரி சீட்டுகளால் டெல்லிக்கும் கிராமத்திற்கும் நடத்திய பன்னாட்டு விமானசேவை.. குட்டிசைக்கிளை எட்டணா வாடகைக்கு... தள்ளிக்கொண்டும் தத்திக்கொண்டும் கடந்த காலங்கள்.. மறந்திடவா முடிகிறது.. பச்சை கிராமத்து பசுமை நினைவுகளை?!.. முந்திரிக்காடுகளில் மூக்குறிஞ்சிய நாட்களை விஞ்சி.. டவுன்பள்ளிக்கூடம்.. பாலம் கடந்து.. பயணிக்க ஆரம்பித்த நாட்கள்.. முந்திரிப்பாலால் தொடைகளில் பெயரெழுதி.. கம்பவுண்டர் மாமாவிடம் களிம்பு வாங்கி.. அப்பாவுக்கு தெரியாமல் ஆற்றிவிட்டாலும் இன்னமும் மாறவில்லை வடுக்கள்.. இதயத்தில் விழுந்த வடுக்கள்.. அந்த இன்ப நாட்களின் இனிய வடுக்கள்.. இன்னமும் மாறவில்லை... வளர்ந்துவிட்ட ஜீவன்களில் சொல்பேச்சு கேட்ட சொக்கத்தங்கத்தை அய்யனாரப்பனுக்கு நேர்ந்துவிட்டதென வெட்டிய நாளிலல்லவா புரிந்தது... அதுவும் ஆட்டுக்குட்டிதானென்று.. அடுத்தத்தடுத்த வாரங்களில் கலங்கிய கண்களோடு பள்ளிசென்றதை இன்று நினைத்தாலும் காட்சிகள் கலங்கலாகத்தான் தெரிகிறது... கண்ணீரைமுட்டி எட்டிப்பார்ப்பதால்.. இரண்டற கலந்துவிட்ட கிராமம்விட்டு போவதில்லை... ஆற்றங்கரையில் சபதமிட்டு கல்லூரியில் கால்பதித்த நாங்கள்.. இப்படியாக.. இளமைக்கால நினைவுகளை இனிமையாய் அசைபோட்டோம்.. இண்டர்நெட்டில்..இ-மெயில் துணையோடு!!??.. ம்.. அவன் இன்று அமெரிக்காவில் நான் ஆஸ்திரேலியாவில்.. எங்களை வளர்த்த கிராமமோ வேற்றுக்கிரகத்தில்..- நினைவலைகள் எழுகையில் அசைபோடுவோம்!!!.. நிழல்களில் நினைவுகளை நிறுத்தி நிஜங்களில் நடைபிணமாய் ந(ர)கரத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. இழந்துவிட்ட கிராமத்து வாழ்க்கையை இதயங்களில் உயிர்ப்பிக்கும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே... கண்களை துடைத்து காட்சிகளை நிறுத்தினேன் கணினியில்.!!!.. posted by Poo at 9/03/2004 10:56:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|